search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை விபத்து"

    கோவை அருகே மொபட்டில் வேலைக்கு சென்ற போது லாரியின் பின் சக்கரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி சவிதா (வயது 40). டைபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் மதுக்கரை ரோட்டில் சென்றபோது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மொபட் மீது உரசியுள்ளது. இதில் சவிதா நிலைதடுமாறி மொபட்டில் இருந்து நடுரோட்டில் விழுந்தார்.

    அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் சவிதா சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) தொழிலாளி. இவரது மனைவி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தனது மொபட்டில் மனைவியை அழைத்து கொண்டு புங்கம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை விட்டுவிட்டு குருந்தமலை கோவிலின் பின்புறம் உள்ள சாலையின் வழியே தனது மொபட்டில் வந்தார்.

    அந்த வழியாக வந்த போது புங்கம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (65) என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கணுவாய்ப்பாளையம் நோக்கி வந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சக்திவேல் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. சக்திவேலும், மனோகரனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த மனோகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை அருகே ஜீப் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது72). இவரது மகன் மகேந்திரன்(28). இவரது மனைவி சங்கீதா(27). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு கோவையிலிருந்து கிணத்துக்கிடவு நோக்கி காரில் சென்றனர். காரை மகேந்திரன் ஓட்டினார். மற்ற 2 பேர் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    இவர்களது கார் மதுக்கரை ரோட்டில் சென்ற போது மகேந்திரன் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த ஜீப் மீது மகேந்திரனின் கார் மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர். 

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவசாமி சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சின்ன தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவரது மனைவி பிருந்தா(35). இவர்கள் நேற்று இரவு மேட்டுப்பாளையம் சென்று விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

    மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மார்கெட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தேரம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த வாசு(21), பாரதி(21) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜடையம்பாளையம் மார்க்கெட் அருகே வந்தபோது பாபு பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது, எதிரே வேகமாக வந்த வாசுவின் மோட்டார் சைக்கிளும், பாபுவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பாபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே வாசு உயிரிழந்தார். பிருந்தா, பாரதி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை அன்னூர் அருகே மழையில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அன்னூர் அடுத்த மாசகவுண்டன் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் காபி கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று சதீஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையத்தில் இருந்து கருவலூர் ரோட்டில் வந்தார்.

    அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சதீஷ்குமார் கீழே விழுந்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்து கல்லூரி மாணவர் மீது மோதியது தொடர்பாக மாணவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #CoimbatoreAccident
    கோவை:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது. படுகாயமடைந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத்(21) என்பது தெரிய வந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreAccident
    கோவையில் லாரியில் மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் அவர்களது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அருகே உள்ளது உழவர் நர்சரி. இங்கு ஆனைகட்டியில் இருந்து கணுவாய் செல்ல ஒரு லாரி புறப்பட்டது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். ஒரு இடத்தில் லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.

    அப்போது அதே லாரியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் தூக்கிவீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கினர். இதில் அவர்களது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இது குறித்து தகவல் தெரிந்ததும் தடாகம் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் மேலே நந்தம் உறைய குன்னம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மாதவன் (வயது 26). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ்குமார் (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் இந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர் என்பது தெரியவந்தது. மாதவனின் மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்டாமல் வாகனத்தை பறிமுதல் செய்து விட்டனர். தவணையை செலுத்தி மோட்டார் சைக்கிளை மீட்க புறப்பட்டபோது தான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. #tamilnews
    கோவையில் இன்று காலை டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 44). இவர் கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக இருந்தார்.

    இன்று காலை அவினாசி ரோடு நவஇந்தியாவில் இருந்து லட்சுமி மில் சந்திப்புக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரத்தில் ஒரு தரைப்பாலம் உள்ளது.

    அங்கு வந்தபோது பின்னால் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி வந்தது. டீசல் லாரி சந்தோஷ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    ஹெல்மெட் அணிந்திருந்த அவர் சுதாரித்து எழுவதற்குள் லாரியின் பின்சக்கரம் சந்தோசின் தலையில் ஏறியது. இதில் ஹெல்மெட் நொறுங்கி அவரது தலை நசுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போக்குவரத்தை மாற்றுபாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் பிணமாக கிடந்த சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கோவை- அவினாசி சாலையான இதில் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர கார், வேன் அதிகம் செல்கின்றன.

    கோவை பஸ் நிலையத்தில் இருந்து நீலாம்பூர் பஸ் நிறுத்தம் வரை 15-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் உள்ளன. இருந்தபோதும் இந்த பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. சாலையோரம் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்று விபத்துக்குள் இந்த பகுதியில் நடக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு 8 மணி முதலே களை கட்டியது.

    இரவு 12 மணி அளவில் மாநகர சாலைகளில் ஏராளமான வாலிபர்கள் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது.

    3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:-

    கோவை காந்திபார்க் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (வயது 19). இவரும், இவரது நண்பரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தன்வீரும்(21) நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வேலாண்டிபாளையம் அருகே வந்த போது எதிரே கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மணிகண்டன் இறந்தார். நியாஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தன்வீர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குனியமுத்தூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மாதவன் (15). நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய இவர் அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    உக்கடம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    ரத்தினபுரி மருதாசலம் வீதியை சேர்ந்தவர் பிஜூ(18). போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் இவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    போத்தனூர் ரோட்டில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிஜூவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிஜூ பரிதாபமாக இறந்தார்.

    இதுதவிர கோவை நகரின் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 20 பேர் கை, கால் முறிந்து காயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
    கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ரெயில் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 18). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி எலட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் சிங்காநல்லூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியே வந்த ரெயில் ஜெயசூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினர். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜெயசூர்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன்றி இன்று காலை ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்பூரில் இருந்து கோவை வந்தபோது கெமிக்கல் சப்ளையர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரநேசன் (வயது49). இவரது மனைவி லதாமகேஸ்வரி (42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சந்திரநேசன் திருப்பூர் முத்து நகரில் தங்கி பனியன் கம்பெனிகளுக்கு கெமிக்கல் சப்ளை செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருப்பூர்- சின்னியம்பாளையம் இடையே உள்ள தென்னம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயங்களுடன் கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×